ஜாதி பாகுபாடு பார்க்கும் கிராமம் அது. அந்த ஊரில் வசதியாக வாழ்ந்து வரும் உயர் ஜாதியை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரில் அண்ணன் ஜாதி வெறி பிடித்தவர். தன் மகன் ஒரு பட்டியலின பெண்ணை காதலித்தான் என்பதற்காக அந்தப் பெண்ணை தனது வேலைக்காரர்களை வைத்து சீரழிக்கிறார். மகனுக்கு ஜாங்கிரியில் விஷம் வைத்து கொல் கிறார்.
தம்பியோ அண்ணனுக்கு நேர் எதிர். அவர் ஜாதி பேதம் பார்ப்பதில்லை. பட்டியலின மக்களின் கல்வி வரை உதவுகிறார். பள்ளியில் படிக்கும் தனது சின்ன மகள் பட்டியலின சக மாணவனுடன் பழக அனுமதிக்கிறார். அது குறித்து தனது ஜாதிக்காரர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்த போதிலும் மகளின் நட்புக்கு குறுக்கே அவர் நிற்கவில்லை. ஒரு விதத்தில் பார்த்தால் மகளை ஊக்குவிக்கவே செய்கிறார்.
அதே சமயம் இந்த ஊருக்கு வெளியே வசிக்கும் சோனியா அகர்வால், விவசாய கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார். அவர் ஊருக்கு வெளியே வாழ்ந்து வர காரணம் என்ன? ஜாதி பேதத்தால் பள்ளியில் படிக்கும் சின்னஞ்சிறுசுகளின் நட்புக்கு பங்கம் வந்ததா என்பது மீதிக் கதை.
நாயகியாக நடித்திருக்கும் சோனியா அகர்வால், படத்தில் அவ்வப்போது காட்சி தருகிறார். நோய்வாய்ப் பட்ட கணவனை குழந்தை போல் பார்த்துக் கொள்ளும் மனைவியாக வரும் அவரது பிளாஷ்பேக் நிஜமாகவே சோகம் கலந்தது.
குழந்தை நட்சத்திரங்களாக நடித்திருக்கும் திலிப்ஸ், சுகன்யா இருவரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். பள்ளி வாத்தியாராக வரும் குட்டிப்புலி சரவணசக்தியை இன்னும் கூட அதிகம் பயன்படுத்தியிருக்கலாம்.
அண்ணன் தம்பியாக நடித்திருப்பவர்கள் நடிப்பு திரைக்கதைக்கே மையமாக சுற்றி சுழல்கிறது.
ஜாதி பாகுபாடு எந்நேரமும் கிராமங்களில் எப்படி தீவிரத் தன்மையோடு செயல்படுகிறது என்பதை காட்சி வழியே நமக்குள் கடத்தி விடுகிறார் இயக்குனர் குரு. வயதான பாட்டிகள் வரை ஜாதி வன்மத்தில் வார்த்தைகளை கொட்டும் இடங்கள் மனதை ரணப்படுத்தி விடுகின்றன.
அந்த சிறுவன் சிறுமியின் நட்பு பின்னணியில் இயக்குனர் ஏதோ சொல்லப் போகிறார் என்று பார்த்தால் அவர்களை காலி செய்து கதையையும் காலி செய்து விடுகிறார், இயக்குனர். இருப்பினும் ஜாதி துவேசத்திற்கு தன் பங்குக்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்த வகையில் இந்த பருத்தி, பேதங்களை சுட்டெரிக்க வந்த தீ தான்.
