தமிழ் ஈழ மக்களும், விடுதலைக்காக போராடிய போராளிகளும் சிங்கள ராணுவத்தால் அனுபவித்த கொடுமைகள் எண்ணிலடங்காது . அவற்றை மையப்படுத்தி பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி உலகையே அதிர வைத்தன.
இந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் படம் தான் சல்லியர்கள். இதில் இதுவரை சொல்லப்படாத புலிகள் இயக்கத்தின் மருத்துவப் பிரிவு எப்படி இயங்கியது.. அதுவும் உயிரை பணயம் வைத்து அவர்களது பதுங்கு குழி மருத்துவமனை எவ்விதம் அர்ப்பணிப்புடன் இயங்கியது என்பதை நெஞ்சுக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறார்கள்.
இந்தப் பதுங்கு குழி மருத்துவமனைகளை தேடி கண்டுபிடித்து அழிக்கும் முயற்சியில் சிங்கள ராணுவம் எப்படி வெறித்தனமாக செயல்பட்டது என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
இப்படியொரு பதுங்கு குழி மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரான சத்யா தேவி, சரியான உணவு, உறக்கம் இன்றி, பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவி செய்வதற்காக தலைமை மருத்துவமனையில் இருந்து மருத்துவர் மகேந்திரன் அனுப்பப்படுகிறார்.
இதற்கிடையே, புலிகள் அமைப்புகளின் மருத்துவக் குழுவை அழித்தால், அவர்களை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று திட்டம் போடும் சிங்கள ராணுவம், போராளிகளின் மருத்துவ பணிகளுக்கு எதிராக செயல்பட தொடங்குகிறது. அதே சமயம், தமிழ் ஈழ மருத்துவர்கள், தங்கள் இயக்க போராளிகளாக இருந்தாலும் சரி, எதிர் முகாம் ராணுவ எதிரிகளாக இருந்தாலும் சரி, உயிருக்காக போராடுபவர்களை காப்பாற்றுவதற்காக தங்களது உயிரையும் பணயம் வைத்து பணி புரிகிறார்கள். அத்தகைய மருத்துவர்களின் மகோன்னத சேவையை உயிர்ப்புடன் தந்து இருக்கிறார்கள்.
மருத்துவர் நந்தினி கேரக்டரில் நடித்திருக்கும் சத்யா தேவி, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அளவான உரையாடல், தெளிவான முடிவு, விவேகமான செயல்பாடு என்று தமிழ் ஈழ போராளி மருத்துவர்களை கண் முன் நிறுத்தி விடுகிறார். பதுங்கு குழியில் துடிப்புடன் கொஞ்சமும் பயமின்றி பணியாற்றும் அவரது உடல் மொழி, தோற்றம், வேகமான செயல்பாடு என அனைத்தும் அந்த கேரக்டரை நமக்குள் ரொம்பவே நெருக்கமாக்கி விடுகிறது. படம் நெடுக ஒரு மருத்துவ போராளியாகவே அவரை உணர முடிவது தான் அந்த கேரக்டரின் வெற்றியே. அதை அந்த கேரக்டராகவே வாழ்ந்து சாதித்து இருக்கிறார் சத்யா தேவி. விருது கொடுத்து கொண்டாடப்பட வேண்டிய நடிப்பு அது.
மருத்துவர் செம்பியன் கேரக்டரில் நடித்திருக்கும் மகேந்திரன், தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வெகுவான வித்தியாசம் காட்டி இருக்கிறார்.
நாயகியின் தந்தை மதியழகனாக வரும் கருணாஸ், மனைவி மகனுடன் சிங்கள ராணுவத்திடம் சிக்கி உயிரை விடும் இடம் உருக்கமானது.
சிங்கள ராணுவ அதிகாரிகளாக நடித்திருக்கும் திருமுருகன், சந்தோஷ், மோகன் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.
படத்தில் காதல் ஜோடியாக வரும் நாகராஜ் –பிரியலயா போராளிகளாக பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.
கென் மற்றும் ஈஸ்வர் இசையில், வைரமுத்து, டி.கிட்டு வரிகளில் பாடல்கள் வேதனையின் விளிம்பு வரை இட்டுச் செல்வது நிஜம். பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் யதார்த்த பதிவுகள். குறிப்பாக யுத்தக் காட்சிகளை படமாக்கிய விதம் நெஞ்சுக்குள் பூகம்பத்தை வீசிப் போகிறது.
கலை இயக்குநர் முஜுபுர் ரஹ்மானின் கைவண்ணத்தில் பதுங்கு குழி மருத்துவனை உள்ளிட்ட படத்தில் இடம் பெறும் சிறு சிறு விசயங்களில் உள்ள பல நுணுக் கங்கள் பிரமிக்க வைக்கின்றன.
எழுதி இயக்கியிருக்கும் தி.கிட்டு, தமிழ் ஈழ விடுதலைப் போராளிகள் பற்றி இதுவரை சொல்லப்படாத விசயங்களை சொல்லியிருப்பதோடு, இனப் பாகுபாடின்றி உயிரைக் காப்பாற்றும் உயரிய நோக்குடன் செயல்படும் தமிழ் ஈழ போராளி மருத்துவர்களின் வாழ்வியலையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
போராளிகளுக்கு உயிரைவிட பிறந்த மண்ணே உன்னதமானது என்பதை வசனங்கள் மூலமாக மட்டும் இன்றி காட்சிகள் மூலமாகவும் உணர்வு பூர்வமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
விமானப்படை தாக்குதலில் இருந்து எதிரணி வீரனின் உயிரைக் காக்க போராளிகள் மருத்துவ குழு உயிரை பணயம் வைத்து ஓடும் அந்த கிளைமாக்சும் அந்த கணத்தில் அந்த வீரன் கண்களில் இருந்து வெளிப்படும் கண்ணீரும் இந்த படம் சொல்ல வந்த மனிதத்தை மாண்புக்குரியதாக் கி விடுகிறது.
