மார்க் — திரை விமர்சனம்

எதற்கும் அஞ்சாத நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும் அரசியலை தங்கள் செல்வாக்கால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் அரசியல் வாதிக்குமான போர்க்களம் தான் படம். அதை அடிதடிக்கு பஞ்சம் இல்லாத மசாலா தூவி தந்து இருக்கிறார்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் இறந்து போகிறார். புதிய முதலமைச்சராக யாரை தேர்வு செய்வது என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கூடி ஆலோசிக்கிறார்கள். அப்போது அவர்கள் கட்சியில் அனுபவமிக்க ஒருவரை முதலமைச்சராக தேர்வு செய்கிறார்கள்.

இந்த நேரத்தில் இறந்து போன முதலமைச்சரின் மகன் அவர்களிடம், ‘நாளை முதலமைச்சராக பதவி ஏற்கப் போவது நான் தான். அதற்கு நீங்கள் ஒத்துழைக்க எவ்வளவு வேண்டும் என்ன வேண்டும் என்பதை இப்போதே கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்’ என்கிறார்.

ஏற்கனவே முதலமைச்சர் கனவில் இருக்கும் அவர் இப்படி பணத்தால் அவர்களை வாயடைக்க செய்து மறுநாள் பதவி ஏற்க தயாராகிறார்.

அன்றைய தினமே 16 சிறுவர்கள் கடத்தப்படுகிறார்கள்அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடும் இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி சுதீப்புக்கு, முதல்வர் மரணம் இயல்பானது அல்ல. அது கொலை என்பது தெரிய வர, அதே நேரம் முதல்வர் கொலை செய்யப்பட்டதற்கு வீடியோ ஆதாரமும் இருப்பது தெரிய வர…

விடிவதற்குள் அந்த ஆதாரத்தை கைப்பற்றி முதல்வரின் மகன் பதவி ஏற்பதை தடுக்க வேண்டும். அந்த இரவுக்குள்ளேயே கடத்தப்பட்ட 16 குழந்தைகள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவர்களை மீட்கவும் வேண்டும்.

ஒரு பக்கம் கடத்தப்பட்ட சிறுவர்களை தேடும் சுதீப், மறுபக்கம் வீடியோ ஆதாரத்தையும் கண்டுபிடிக்க களம் இறங்குகிறார். அந்த இரண்டையும் அவரது அதிரடி முயற்சி சாத்தியமாக்கியதா என்பது விறுவிறு கதைக்களம்.

இடைநீக்கம் செய்யப்பட்டாலும், காக்கி சட்டை போடாமலேயே போலீஸ் கடமையை செய்யும் சுதீப், தனது அதிரடியான நடிப்பு மூலம் முழு படத்திலும் பரபரப்பை பற்ற வைக்கிறார். படம் முழுவதும் மாஸாக வலம் வருகிறார். ஒரே நேரத்தில் ஏகப்பட்ட பேரை அடித்து துவைக்கும் காட்சிகளை நம்பும்படி செய்திருக்கிறார். போதையில் காவல் நிலையத்தில் அறிமுகமாகும் காட்சியே படத்தை எதிர்பார்க்க வைத்து விடுகிறது.

வில்லனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா, தன் பார்வையிலேயே கொடூரத்தை வெளிப்படுத்தி விடுகிறார்.

இவரது தந்தையாக ஜி.எம் குமார், தம்பியாக விக்ராந்த் தனித்துவ நடிப்பால் தங்கள் கேரக்டர்களுக்கு சிறப்பு சேர்க்கிறார்கள். கொஞ்சம் காமெடி கலந்த வில்லனாக சோமசுந்தரம் தன் பங்குக்கு சிக்சர் அடிக்கிறார்.

மற்றொரு காமெடியனாக யோகி பாபு வந்து போகிறார்.

ரோஷ்னி பிரகாஷ், தீபிக்‌ஷா, ட்ராகன் மஞ்சு, அருள்தாஸ், சுப்பு பஞ்சு, கோபால்கிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், அர்ச்சனா கோட்டி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்கள் கேரக்டர்களை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சேகர் சந்துரு, படத்தின் பிரம்மாண்டத்தை காட்சி வழியே கண் முன் நிறுத்துகிறார். பெரும்பாலான காட்சிகள் இரவில் படமாக்கப்பட்டாலும், பார்வையாளர்களுக்கு அந்த உணர்வே ஏற்படாத வகையில் படமாக்கி இருப்பது மேலும் சிறப்பு.

இசையமைப்பாளர் பி.அஜனீஸ் லோக்நாத், பாடல்கள் மற்றும் பின்னணி இசையிலும் ஒரு சேர ரசனை கூட்டுகிறார்.

எழுதி இயக்கியிருக்கும் விஜய் கார்த்திகேயா, சாதாரண மையக்கருவுக்கு அதிரடி முலாம் பூசி மொத்த படத்தையும் அங்கே இங்கே கண்களை திருப்பாமல் ரசிக்க வைத்திருக்கிறார். சுதீப் போன்ற மாஸ் ஹீரோவுக்கான மாஸ் ஆக்‌ஷன் படமாக இயக்கியவர், ஆக்சன் இயக்குனராக தன்னையும் அடையாளப்படுத்திக் கொண்டு விடுகிறார். குறிப்பாக குழந்தைகளை உயிருடன் மீட்கும் அந்த இரவு நேர காட்சி திகிலுக்கு திகில். பரபரப்புக்கு பரபரப்பு.

மார்க், மாஸ்.