இரட்டையர் -திரை விமர்சனம்

கொடைக்கானல் பயணத்தில் தங்கள் ட்வின்ஸ் பெண் குழந்தைகளுடன் தம்பதிகள் வந்த கார் விபத்துக்கு உள்ளாகிறது. கணவர் ஸ்பாட்டிலேயே இறந்து போக, மனைவிக்கு முகத்தில் கன்னா பின்னா காயம். மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தை சீரமைக்கிறார்கள்.

சிகிச்சை முடிந்து வீடு வரும் அம்மா அந்த ட்வின்ஸ் சகோதரிகளுக்கு அந்நியமாக தெரிகிறார். விபத்துக்கு முன்பு வரை தங்களிடம் அன்பு மட்டுமே காட்டத் தெரிந்த அந்த அம்மா, இப்போது சிறு தவறுக்கும் பிள்ளைகளை அடித்து நொறுக்குகிறார். இடது கை பழக்கம் கொண்ட அம்மா இப்போது வலது கை பழக்கத்துக்கு மாறி இருக்கிறார். இப்படி பல மாறுபட்ட நடவடிக்கைகள் உணரும் அந்த ட்வின்ஸ், இது நம் அம்மாவாக இருக்காது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

வீட்டுக்குள்ளே அம்மாவை கட்டி வைத்து, ‘எங்க அம்மாவை என்ன செய்தாய்?’ என்று கேட்டு சித்ரவதை செய்கிறார்கள். ஆனால் அவரோ’ ‘நான்தான் உங்க அம்மா’ என்று மறுபடி மறுபடி சொல்கிறார். ஆனாலும் நம்பாத அந்த ட்வின்ஸ், தங்கள் தாய் விஷயத்தில் ஒரு விபரீத முடிவை எடுக்கிறார்கள்.
உண்மையில் அவர் தங்களின் தாயார் தானா என்ற கேள்விக்கு கிளைமாக்சில் விடை கிடைக்கிறது.

குழந்தைகள் மனதில் விழுந்த சந்தேக விதை என்ற மையக்கரு தான் கதையின் அடிநாதம். அதை அடியொற்றியே  கதை போகிறது.

அம்மாவாக வரும் அபிநயா, ஆபரேஷனுக்கு பின் தனது குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் விதம் நமக்கே அச்சமூட் டுகிறது. கை கால்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளிடம் ‘,நான் தான் உங்க அம்மா. கட்டுகளை அவிழ்த்து விடுங்க’என்று கெஞ்சும் இடத்தில் அந்த கேரக்டருக்கு தனது அனுபவ நடிப்பால் சிறப்பு சேர்க்கிறார்.

அந்த ட்வின்ஸ் குழந்தைகள் அனுமிதா – அனுஷிதா நிஜமாகவே சமர்த்து. தங்கள் தாயாக வந்தவர் உண்மையா போலியா என்று கண்டுபிடிக்க அவர்கள் போடும் ஒவ்வொரு திட்டங்களும் கதையின் விறுவிறுப்பு மையம்.

அபிநயா குடும்பத்தின் நண்பராக வரும் டைரக்டர் சுப்பிரமணிய சிவா நல்லவரா கெட்டவரா என்பதை கிளைமாக்ஸ்சிலாவது சொல்லி இருக்கலாம்.

டாக்டராக வெங்கட் சுபா ஓரிரு காட்சியில் வந்தாலும் மனதில் நிற்கிறார். ஜி கே வி யின் இசையும், முகமது அமீனின் ஒளிப்பதிவும் இந்த படத்தின் இரு கண்கள் எனலாம்.

எழுதி இயக்கிய ஜெக்தீஷ் தம்பையா கதையின் மையப் புள்ளி விலகாமல் தேர்ந்த இயக்குனருக்கான அடையாளத்தை பதிவு செய்து விடுகிறார். குறிப்பாக அந்த ட்வின்ஸ் விஷயத்தில் வைக்கப்பட்ட சஸ்பென்ஸ் நிஜமாகவே ‘அட’ போட வைக்கிறது

பிளஸ்:
தாயின் மீதான குழந்தைகளின் தீராத சந்தேகம்.
பிளாஷ்: நேர்கோட்டில் சொல்லப்பட்ட கதை.

ரேட்டிங்: 6/10.