பரிமளா அண்ட் கோ -திரை விமர்சனம்

ஜெயராம் -ஊர்வசி தம்பதிகளுக்கு சஞ்சனா, அனந்திகா என இரு மகள்கள். நடுத்தர குடும்பம். அதே நேரம் மகிழ்ச்சியான குடும்பம்.

அந்த மகிழ்ச்சியை குலைக்கும் விதத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. ஜெயராமின் இளைய மகள் அனந்திகாவை லோக்கல் ரவுடியும் போதைப் பொருள் விற்பவருமான சாண்டி மாஸ்டர் துரத்தி, துரத்தி காதலிக்கிறார். அதை தட்டிக் கேட்கும் மூத்த மகள் சஞ்சனா முகத்தில் ஆசிட் அடித்து விடுவதாக மிரட்டுகிறார். போதாக்குறைக்கு ஜெயராமை தேடி வந்து ‘உமது இளைய மகள் தான் என் மனைவி. இது மட்டும் நடக்காவிட்டால் குடும்பத்தில் ஒருவரும் உயிரோடு இருக்க மாட்டீர்கள்’ என்று எச்சரிக்கையும் விடுக் கிறார்.
ஆனாலும் அந்த குடும்பத்துக்கு குறிப்பிட்ட அந்த ரவுடி தொல்லை தொடர்கிறது.
ஒரு கட்டத்தில் தினம் தினம் செத்துப் பிழைக்கும் நிலையில் இருந்து விடுபட, அவனைக் கொன்றால் தான் என்ன என்று யோசிக்கிறது ஜெயராமின் குடும்பம்.
ஒரு தீபாவளி நாளில் இவர்கள் நினைத்தது இவர்கள் சம்பந்தப்படாமல் நடந்து முடிகிறது. ஆம். அந்த ரவுடி கொடூரமாக கொல்லப்படுகிறான்.இன்ஸ்பெக்டர் மிஷ்கின் அந்த வழக்கை விசாரிக்கிறார். அப்போது அந்த ரவுடி, ஜெயராம் குடும்பத்துக்கு
தொல்லை கொடுத்த விஷயம் தெரிய வருகிறது. பெண் பிள்ளையின் எதிர்காலம் கருதி ஜெயராம் குடும்பத்தில் உள்ள ஒருவர் ஏன் இந்த ரவுடியை கொலை செய்திருக்கக் கூடாது என்ற கேள்வி இன்ஸ்பெக்டர் மனதில் எழ…
போலீஸ் விசாரணை அவர்கள் குடும்பத்தை நோக்கி நீளுகிறது.
உண்மையில் அந்த ரவுடியை கொன்றது யார்? கொலைக்கான காரணம் என்ன? அதை போலீஸ் அதிகாரி கண்டுபிடித்தாரா? ஜெயராம் குடும்பம் அந்த வழக்கில் இருந்து தப்பித்ததா? என்பது படத்தின் கதை.
ஒரு சீரியஸ் கதைக்கு சிரிப்பு போர்வை போர்த்தியதில் பல இடங்களில் காட்சிகள் இரண்டும் கெட்டா னாகி விடுகிறது. இதை சீரியஸாகவே சொல்லி இருக்கலாமே .

ஜெயராம் கேரக்டர் பெயர் பரிமளா. அதனால்தான் அவரது மொத்த குடும்பத்தையும் குறிக்கும் விதத்தில் பரிமளா அண்ட் கோ என்ற தலைப்பை படத்துக்கு சூட்டி அழகு பார்த்திருக்கிறார்கள். பரிமளா என்ற பெயர்க் காரணம் சொல்லும் இடத்தில் நிஜமாகவே இயக்குனர் பாண்டிராஜ் முத்திரை.

குடும்பப் பாங்கான கதை சொல்வதில் குறிப்பாக
நடுத்தர குடும்பத்தின் நாடி பிடித்து கதை சொல்வதில் பாண்டிராஜ் கில்லாடி. இதிலும் ஒரு குடும்ப கதையைத் தான் ரசிகர்கள் முன் வைத்திருக்கிறார். ஆனால், திரிஷ்யம்படத்தின் தொடர் வெற்றியில் ஏற்பட்ட சிந்தனையோ என்னவோ, இந்த குடும்பக் கதைக்குள் ஒரு கொலையை நுழைத்திருக்கிறார். அதனால்
கொலை ,
விசாரணை, அதில் திருப்பம் என்று கதை திரில்லர் பாதையில் நுழைந்து விடுகிறது. அந்த குடும்பம் கொலைப்பழியில் இருந்து
மீண்டதா என்பதை கிளைமாக்சில் ஒரு சிறு டிவிஸ்ட் வைத்து முடிக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய ரிலாக்ஸ் ஜெயராம்- ஊர்வசி தம்பதிகள். தங்கள் அனுபவ நடிப்பால் பல காட்சிகளுக்கு நகைச்சுவை வர்ணம் பூசி விடுகிறார்கள். சில இடங்களில் கடியாக இருந்தாலும் இவர்களின் உடல் மொழியிலும் வசன உச்சரிப்பிலும் அது காமெடியாகி விடுகிறது. போலீஸ் விசாரணைக்கு பயந்து உளறுவது, குடும்ப உறுப்பினர்களிடம் ரவுடி கொலை பற்றி விசாரிப்பது போன்ற காட்சிகள் நிஜமாகவே ஜெயராம் ஸ்பெஷல்.

ஜெயராம் மனைவியாக சுதந்திரம் கேரக்டரில் வரும் ஊர்வசிக்கு நடிப்பில் ஸ்கோர் செய்ய நிறைய காட்சிகள்.
போலீஸ் விசாரணையில் அவரது பதில் கவுண்டர்கள் எல்லாமே நகைச்சுவையின் உச்சம்.
மகள்களாக வரும் சஞ்சனா, அனந்திகா இயல்பான நடிப்பில் கவர்கிறார்கள். தில்லான அக்கா பயந்த சுபாவ தங்கையாக நடிப்பில் ஒரு கலக்கு கலக்குகிறார்கள்.
போலீஸ் இன்ஸ்பெக்ட ராக வரும்
மிஷ்கின் தனக்கே உரிய பாணியில் துப்பறிந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்கிறார்.
அந்த போதை ரவுடி கேரக்டரில்
சாண்டி மாஸ்டர் முடிந்த வரை கடுப்பேற்றுகிறார்.(அதாவது நல்ல வில்லனுக்கான அடையாளம் பெற்று விடுகிறார்.)
ஹவுஸ் ஓணராக வரும் யோகி பாபு, காமெடி அறிகுறி இல்லாமல் வந்து போகிறார்.
சிங்கம்புலி, பகவதி பெருமாள் இருவரும் ஆங்காங்கே சிரிக்க வைக்க முயல்கிறார்கள். துப்பறிய போகும்
போலீஸ் அதிகாரி மிஷ்கினுடன் ஒரு சப்-இன்ஸ்பெக்டராக தயாரிப்பாளர் தமிழ்க் குமரனும் வந்து போகிறார்.

ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவும்
ஃபாக்ஸனின் இசையமைப்பும் படத்தின் கூடுதல் சிறப்பு.
எழுதி இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ்.
கொலை,அது தொடர்பான விசாரணை ஒரு நடுத்தர குடும்பம் வரை நீள்வதை கதையாக்கி இருக்கிறார்.
அவருடைய வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் என்றாலும் கிளைமாக்ஸ் வரை சரளமாக கதையைக் கொண்டு வந்து விடுகிறார்.

பிளஸ்: தங்களுக்கான கேரக்டர்களை நடிப்பால் மெருகேற்றி மொத்த கதையையும் தாங்கிப் பிடித்த ஜெயராம்-ஊர்வசி.

பிளாஷ்: பழிவாங்கும் கொலைக் கதையையும் நகைச்சுவை மிளிர சொல்ல முயன்ற இயக்குனர் பாண்டிராஜ்.

ரேட்டிங்: 6.5/10.