கொம்பு சீவி –திரை விமர்சனம்

வைகை அணை கட்டும் போது சுமார் 12 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி விடுகிறது. இதனால், அந்த கிராம மக்களை அரசாங்கம் வேறு இடத்திற்கு குடியமர்த்துகிறது. ஆனால், விவசாயம் செய்து வாழ்ந்து வந்த அவர்களுக்கு புதிய இடத்தில் அதற்கான சூழல் இல்லை. அங்கு விவசாயம் செய்வதற்கான வசதிகள் இல்லாததால், அணையின் நீர் மட்டம் குறைந்து, அவர்களது நிலம் தெரியும் போது அவர்கள் அங்கு விவசாயம் செய்கிறார்கள். மீண்டும் அணை நிரம்பியதும் அவர்களது நிலம் தண்ணீரில் மூழ்கி விடும் போது, வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில் தான் தங்கள் பிழைப்புக்காக கஞ்சா கடத்தி சம்பாதிக்கிறார்கள். இதில் முக்கியமான வர் சரத்குமார்.
அதில் கிடைக்கும் வருமானத்தை ஊர் மக்களுக்கு வாரிக் கொடுப்பதால் அந்த மக்கள் அவரை கொண்டாடுகிறார்கள்.
இதே வாழ்வாதார பிரச்சனையால் தனது பெற்றோரை இழந்த சண்முக பாண்டியன், தனது சிறு வயதில் சரத்குமாரிடம் வேலைக்கு சேர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபடுகிறார். தனது
பெற்றோரை இழக்க காரணமான அதே பணத்தை அதிகமாக சம்பாதித்து, பண மெத்தையில் படுக்க வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருக்கிறது. அவரது ஆசையை நிறைவேற்றும் ஆசானாக இருக்கிறார். சரத்குமார்.
ஆனால் கஞ்சா கடத்தலை மோப்பம் பிடிக்கும் காவல்துறை சும்மா இருக்குமா? அவர்கள் மீது கை வைக்கிறது. போலீஸ் வைத்த பொறியில் கஞ்சாவுடன் சிக்குகிறார் சண்முக பாண்டியன். போலீசின் லத்தி அவரது உடம்பை உழுது வைக்க, மாமா
சரத்குமார் சும்மா விடுவாரா? போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைத்து லாக்கப்பில் இருக்கும் மருமகனை மீட்கிறார்.
இதனால் ஆத்திரமாகும் போலீஸ் இந்த மாமா- மருமகன் கூட்டணியை வேட்டையாட ஸ்கெட்ச் போடுகிறது.

தலைமறைவான அவர்களை போலீஸ் தேட, அவர்கள் சிக்கினார்களா என்பது பரபரப்பான கிளைமாக்ஸ்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் சண்முக பாண்டியன், ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களிலும்
தேறித் தெரிகிறார். நகைச்சுவை காட்சிகளிலும் அட, ஆச்சரியப்படுத்துகிறார்.
படம் நெடுக நடிப்பில் பட்டையை கிளப்புகிறார் சரத்குமார். கதையை தாங்குவதே இவரது கேரக்டர் தான். போலீஸ் கஸ்டடியில் மருமகன் அடி வாங்குவது தாங்காமல் கண்ணீருடன் அரற்றும் இடத்தில் பாசமிகு தந்தையை நடிப்பில் பிரதிபலிக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை தார்னிகா, காவல்துறை அதிகாரியின் மிடுக்கை நடிப்பில் பிரதிபலிக்கிறார். சண்முக பாண்டியன் அவரை காதல் சிக்னலுடன் நெருங்கும் போதெல்லாம் மதில் மேல் பூனையாக வலம் வரும் நடிப்பில் ரசிக்க வைக்கிறார். தன்னை காதலியா கவே நினைத்துக் கொண்டிருக்கும் சண்முக பாண்டியனை பொறிவைத்து பிடிக்கும் இடத்தில் தானே குற்றம் செய்தது போன்ற அந்த முகபாவம் நிஜமாகவே சூப்பர்.

காவலர்களாக நடித்திருக்கும் காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், குட்டி பூசாரியாக இருந்து சரத்குமார் கூட்டணியில் சேரும் கல்கி ராஜா, லாரி டிரைவர் முனீஸ் காந்த் ஆகியோர் முடிந்தவரை சிரிக்க வைக்கிறார்கள்.

காவல் துறை உயர்அதிகாரியாக வரும் சுஜித் சங்கர், அந்த சைக்கோ மேன ரிசத்தில் பயமுறுத்துகிறார். சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் விஜே ஐஸ்வர்யா, கஞ்சா புரோக்கர் ராம்ஸ் நடிப்பில் கவனிக்க வைக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் அந்த உசிலம்பட்டி பாட்டு சூப்பரப்பு.
பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவில்
வைகை அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளாக காட்டப்படும் பகுதிகள் அழகு. அழகு. அழகோ அழகு.
எழுதி இயக்கியிருக்கும் பொன்ராம், ஒரு கனமான கதையை எடுத்துக் கொண்டு அதை முடிந்த வரை தனது நகைச்சுவை தூவல்களால் தாங்கிப் பிடிக்க முனைந்திருக்கிறார். விவசாயம் இல்லை என்பதற்காக கஞ்சா கடத்துவதை எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் படத்தில் காட்டுவது நெருடல். என்றாலும் சண்முக பாண்டியன்- சரத்குமார் கூட்டணி முடிந்தவரை முட்டுக்கொடுத்து படத்தைக் காப்பாற்றி விடுகிறது.
பல ஊருக்கு நன்மை பயக்கும் அணையாக இருந்தாலும், அதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் வலியை காட்சி அமைப்பின் மூலம் இன்னும் கூட அழுத்தமாக பதிவு செய்து இருக்கலாம்.
கொம்பை இன்னும் கூட சீவி இருக்கலாம்.